Back

ⓘ பொ. பூலோகசிங்கம். பொன். பூலோகசிங்கம் ஈழத்துத் தமிழறிஞர். பேராசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், பண்பாடு, சமயம், வரலாறு பற்றி ஏராளமான கட்டுரை ..
                                     

ⓘ பொ. பூலோகசிங்கம்

பொன். பூலோகசிங்கம் ஈழத்துத் தமிழறிஞர். பேராசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் இலக்கியம், இலக்கணம், பண்பாடு, சமயம், வரலாறு பற்றி ஏராளமான கட்டுரைகளை எழுதியுள்ளார். இரு உலகத் தமிழாராய்ச்சி மாநாடுகளிலே பங்கு கொண்டவர்.

                                     

1. வாழ்க்கைச் சுருக்கம்

இலங்கையின் வட மாகாணத்தில், வவுனியாவில் செட்டிக்குளம் என்ற ஊரில் பொன்னையா உடையார் சோதி ரத்தினம் தம்பதியருக்கு நான்காவது மகனாகப் பிறந்த இவர், ஆரம்பக் கல்வியை செட்டிகுளம் அரசினர் தமிழ் வித்தியாலயத்திலும் இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரியிலும் கற்று சித்திபெற்று அங்கிருந்து பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்று 1961 ஆம் ஆண்டு தமிழில் முதலாம் வகுப்புச் சித்தியினைப் பெற்றார். பேராசிரியர்கள் வி. செல்வநாயகம், ஆ. சதாசிவம், ச. தனஞ்சயராசசிங்கம், சு. வித்தியானந்தன் ஆகியோரின் மாணவர். இலங்கை அரசாங்க பல்கலைக்கழகப் புலமைப்பரிசில் பெற்று 1963 முதல் 1965 வரை ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் திராவிட மொழியியலறிஞர் பேராசியர் தோமஸ் பரோவின் கீழ் மொழியியல் ஆராய்ச்சி மேற்கொண்டு கலாநிதிப் பட்டம் பெற்றார். வவுனியாவில் முதலாவதாக கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டவரும் இவரே என்பது சிறப்புக்குரியது. எடின்பரோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் எஸ். பிற்கோடர் உடன் இரண்டாம் மொழி கற்பித்தல் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்டார்.

இலங்கைப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக 1965 இல் சேர்ந்து, கொழும்புப் பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் 1997 வரை பேராசிரியராகப் பணிபுரிந்தார். 1997 ஆம் ஆண்டு தனது பேராசியர் பதவியை விட்டு விலகி புலம் பெயர்ந்து அவுஸ்திரேலியா சென்று சிட்னி நகரில் வசித்து வந்தார்.

                                     

2. எழுத்துப் பணிகள்

ஆணல்ட் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகத்தினை 1886 அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளுடன் எழுதி முதலிரு பாகங்களையும் 1975 இலும் 1979 இலும் வெளியிட்டுள்ளார். கொழும்புத்தமிழ்ச்சங்கம் இந்த இரண்டு நூல்களையும் வெளியிட்டது. ஆங்கிலக் கவிஞர் தம்பிமுத்து பற்றித் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதிய கட்டுரைகள் நூலுருவாகியுள்ளன. இவற்றைவிட நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்துவதிலும் முன்னின்று உழைத்தவர்களில் இவரும் ஒருவராவார். ஈழத்து இலக்கிய வரலாற்றும் பாடநெறி உருவாக்கத்திலும் கணிசமான பங்களிப்பைச் செலுத்தினார்.

                                     

3. வெளிவந்த நூல்கள்

  • Poet Thambimuthu – a profile
  • பாவலர் சரித்திர தீபகம். பகுதி 1. அ.சதாசிவம்பிள்ளை மூல ஆசிரியர், பொ.பூலோகசிங்கம் பதிப்பாசிரியர். கொழும்புத் தமிழ்ச்சங்கம், மீள் பதிப்பு, சனவரி 1975
  • இந்துக் கலைக்களஞ்சியம்
  • தமிழ் இலக்கியத்தில் ஈழத்தறிஞரின் பெருமுயற்சிகள் கட்டுரைத் தொகுப்பு, 1970, இலங்கை அரசின் சாகித்திய மண்டல விருது பெற்றது
  • சிலப்பதிகார யாத்திரை கட்டுரைத் தொகுதி, 2002
  • 261 அறிஞர்கள் பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் 1969
  • நாவலர் பண்பாடு கட்டுரைத் தொகுதி, 2000
  • ஈழம் தந்த நாவலர் கட்டுரைத் தொகுதி, 1997, இலங்கை அரசின் விருது பெற்றது
  • தமிழ் ஆய்வுச் சிந்தனைகள் 2017

நூல்கள் தவிர பல்வேறு மலர்கள், இதழ்களில் நூற்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை தமிழ் இலக்கியம், ஈழத்துத் தமிழ் இலக்கிய வரலாறு, சமயம், இலக்கணம் என்பன சார்ந்தவை. உலாப்பிரபந்தவளர்ச்சி, பண்டைத் தமிழ் இலக்கியத்தில் அகப்பொருள் நெறி, தத்தை விடுதூது, பதினெட்டாம் நூற்றாண்டு வரையான ஈழத்துத் தமிழ் இலக்கியம், பத்தொன்பதாம் நூற்றாண்டு ஈழத்துத் தமிழ் வளர்ச்சி, ஈழத்துப் புராணங்கள், வன்னி நாட்டின் வரலாறு, கோணேசர் கல்வெட்டு, முருகவழிபாட்டின் தோற்றம் வளர்ச்சியும், தமிழ் இலக்கண விசாரம் என்பன குறிப்பிடத்தக்க சில கட்டுரைகளாகும்.