Back

ⓘ தி. க. ராமானுச கவிராயர். கவித்தென்றல் தி. க. ராமானுச கவிராயர் பி.ஏ., பி.எல். என்பவர் தமிழ் புலவர், காந்தியவாதி, நாடக எழுத்தாளர், வழக்குரைஞர், மனிதநேயம் மிக்கவர் ..
                                     

ⓘ தி. க. ராமானுச கவிராயர்

கவித்தென்றல் தி. க. ராமானுச கவிராயர் பி.ஏ., பி.எல். என்பவர் தமிழ் புலவர், காந்தியவாதி, நாடக எழுத்தாளர், வழக்குரைஞர், மனிதநேயம் மிக்கவர் எனப் பன்முகம் கொண்டவர்.

இவர் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் புலமை பெற்று விளங்கினார். இவர் தமிழ் மொழியில் 14 நூல்களையும், ஆங்கில மொழியில் 5 நூல்களையும் எழுதியுள்ளார். அவரின் படைப்புகளில் கையாண்ட தேர்ந்த மொழி ஆளுமை, கவிதைத்திறன் ஆகியவற்றால் அறியப்படுகிறார்.

அவர் மகாத்மா காந்தியின் வழியைப் பின்பற்றினார். தன் வாழ்நாள் முழுவதும் சத்தியம் மற்றும் உண்மையாக இருப்பதைக் கடைப்பிடித்தார். அவர் பல நூல்களை எழுதினாலும், 12285 வார்த்தைகளால் எழுதப்பட்ட மகாத்மா காந்தி காவியம் என்னும் நூல் அவர் எழுதிய பிற பக்தி நூல்களை விட மிகச் சிறந்ததாகப் போற்றப்படுகிறது. மேலும். நாமக்கல் கவிஞர் விருதுக் குழு அவருக்கு "கவித்தென்றல்" என்னும் பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது. கவிராஜர் அந்த நூலை ஆங்கிலத்தில் பாரத் ரீபார்ன் Bharath reborn என்கிற பெயரில் மொழிபெயர்த்தார். அவர் பக்தியுடனும், எளிமையாகவும் வாழ்ந்து தனது 80ம் வயதில் காலமானார்.

                                     

1. இளமைப்பருவம்

தி. க. ராமானுச கவிராயர், திருநெல்வேலியில் கள்ளபிரான்-அரசாழ்வார் தம்பதிக்கு 28 திசம்பர்,1905ம் ஆண்டு பிறந்தார். தனது 12ம் வயதிலேயே பாடல்களை எழுதினார். அவர் ஆழ்ந்த ஈடுபாட்டுடன் இலக்கியங்களை கற்று, தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் புலமை பெற்றுத் திகழ்ந்தார். சிறு வயதிலேயே ஷேக்ஸ்பியர் நாடகங்களுக்கு வர்ணணை செய்யும் அளவிற்கு அவர் புலமை பெற்றிருந்தார். அவரது தாயார் மறைந்ததால், தாய்மாமன் மூலம் தத்து எடுக்கப்பட்டு வளர்ந்தார்.

                                     

2. குடும்ப வாழ்க்கை

கவிராயர் இளமையில் செல்லம்மாள் என்பவரை மணந்தார். அவருக்கு ஐந்து குழந்தைகள் பிறந்தன. சில வருடங்களுக்குப் பிறகு, செல்லம்மாள் மறைந்ததும் விசாலாட்சி என்பவரை மணந்தார். இரண்டாவது மனைவியும் மற்றும் இரு மகள்களும் இறந்துவிட்டதால் அவர் தனது வாழ்நாளில் தனது கடமைகளை ஒரு துறவி போலவே செயல்படுத்தி, உயர் மதிப்பு, மெய்யியல் மற்றும் உண்மையை உள்ளடக்கிய இலக்கிய படைப்புகளை உருவாக்கினார்.

                                     

3. மகாத்மா காந்தி காவியம்

கவிராயர், 1975 மற்றும் 1979ம் ஆண்டுகளுக்கிடையில் தனது சிறந்த படைப்பான மகாத்மா காந்தி காவியம் என்னும் நூலை நான்கு தொகுதிகளாக தமிழ் மொழியில் வெளியிட்டார். இந்த படைப்பு கம்ப ராமாயணத்திற்குப் பிறகு கவிராயரின் காவியம் என்று வல்லுனர்களால் பாராட்டப்பட்டது. அனைத்து முக்கிய இந்திய பத்திரிகைகளிலும் செய்தித்தாள்களிலிருந்தும் இந்த படைப்பிற்காக கவிராயர் பல வெளிப்படையான விமர்சனங்களைப் பெற்றார். இன்றும், இப்படைப்பில் மன்றங்கள், போட்டிகள் மற்றும் இலக்கிய மதிப்பீடுகள் நடைபெறுகின்றன.

                                     

4. பிற படைப்புகள்

இதைத் தொடர்ந்து, கவிராயர் பல ஆங்கில நூல்களை எழுதினார். 1979ம் வருடம் லிரிக்ஸ் ஆஃப் லைஃப் என்ற கவிதை தொகுப்பையும், முதின் என்கிற நாடகத்தையும் எழுதி வெளியிட்டார். அதற்கடுத்த வருடத்தில் மகாத்மா காந்தி காவியத்தை பாரத் ரீபார்ன் அல்லது த ஸ்டோரி ஆஃப் மாத்மா காந்தி என்கிற பெயரில் மொழி பெயர்த்தார். பல்துறை வித்தகரான கவிராயர் மேலும் மூன்று ஆங்கில நூல்களை எழுதினார். அவை மாத்தமேட்டிக்ஸ் அன்ட் மேன், அ டிரீட்டிஸ் ஆன் ஹிண்டூயிசம், மற்றும் கம்பராமாயணம் இன் இங்கிலீஸ் வெர்ஸ் ஆகும். 1989இல் மகாத்மா காந்தி என்கிற தலைப்பில் ஆங்கில நாடகத்தை எழுதினார். இதைத் தவிர பல்வேறு பிரிவுகளில் கவிதை மற்றும் உரைநடைகளை எழுதியுள்ளார்.

                                     

5. மனிதநேயம்

பெருமளவு வசதி படைத்தவராக இருந்தாலும், கவிராயர் எளிமையாக வாழ்ந்தார். இவர் தனது 100 ஏக்கர் நிலத்தை ஆச்சார்யா வினோபாவேயின் பூமிதான இயக்கத்திற்கு நன்கொடையாக அளித்தார். தனது கிராமத்தில் உள்ளவர்களுக்காக தாய்-சேய் நல விடுதி ஒன்றினை ஏற்படுத்தினார். தகுதியான குழந்தைகளுக்கு கல்வி உதவி அளித்தார். இந்த உண்மையான காந்தியவாதி 1985 இல் மறைந்தார்.