Back

ⓘ மயூரன் சுகுமாரன், லண்டனில் பிறந்த இலங்கைத் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலியர் ஆவார். இவர் ஒரு தற்காப்புக் கலை விற்பன்னரும், ஓவியரும் ஆவார். அவுஸ்திரேலி ..
                                     

ⓘ மயூரன் சுகுமாரன்

மயூரன் சுகுமாரன், லண்டனில் பிறந்த இலங்கைத் தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த ஓர் ஆத்திரேலியர் ஆவார். இவர் ஒரு தற்காப்புக் கலை விற்பன்னரும், ஓவியரும் ஆவார். அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரப் புறநகரான ஓபன் நகரில் வாழ்ந்தவர். போதைப் பொருள் கடத்தியமைக்காக இந்தோனேசியாவில் பாலியில் 2005 ஏப்ரல் 17 இல் கைது செய்யப்பட்ட "பாலி ஒன்பது" என்ற ஒன்பது பேர்களின் தலைவர்களில் ஒருவராக இவர் கணிக்கப்படுகிறார். மயூரன் பாலியின் டென்பசார் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு, 2006 பெப்ரவரி 14 இல் இவருக்கு "சுட்டுக் கொலை" செய்யப்படும் முறையிலான மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டது.

தனது தண்டனைக்கு எதிராக சுகுமாரன் மேன்முறையீடு செய்தார், ஆனாலும் பாலி உயர்நீதிமன்றம் மேன்முறையீட்டைத் தள்ளுபடி செய்து 2011 சூலை 6 அன்று மரணதண்டனையை உறுதிப்படுத்தியது. 2014 டிசம்பர் 30 அன்று சுகுமாரனின் பொதுமன்னிப்புக்கான விண்ணப்பம் அரசுத்தலைவர் ஜோக்கோ விடோடோவினால் நிராகரிக்கப்பட்டு, பாலி ஒன்பதின் இன்னொரு தலைவர் ஆன்ட்ரூ சானுடன் சேர்த்து மரணதண்டனை உறுதியானது < சுகுமாரனும் ஆன்ட்ரூ சானும் பாலி கெரொபோக்கான் சிறைச்சாலையில் வைக்கப்பட்டு. 2015 சனவரியில் இவர்கள் நுசகம்பான்கன் தீவில் உள்ள சிறைச்சாலைக்கு இடம் மாற்றப்பட்டார்கள். மயூரன், அன்ட்ரூ சான் ஆகியோருக்கு மரணதண்டனை பற்றிய அதிகாரபூர்வமான அறிவித்தல் 2015 ஏப்ரல் 25 சனிக்கிழமை கொடுக்கப்பட்டது. மரணதண்டனை 2015 ஏப்ரல் 29 அன்று அதிகாலை 03:00 மணிக்கு நிறைவேற்றப்பட்டது.

                                     

1. ஆரம்ப வாழ்க்கை

லண்டனில் பிறந்த மயூரன் சிறிது காலம் இலங்கையில் வசித்து விட்டு பெற்றோருடன் ஆத்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்தார். மயூரன் தனது ஆரம்பக் கல்வியை சிட்னி ஹோம்புஷ் ஆரம்பப் பாடசாலையிலும், இடைநிலைக் கல்வியை ஹோம்புஷ் உயர்தர ஆண்கள் பாடசாலையிலும் கற்றார். பாடசாலைப் படிப்பு முடிந்ததும் வங்கி ஒன்றிலும் பின்னர் சிட்னியில் கடவுச்சீட்டு அலுவலகத்திலும் பணி புரிந்தார்.

                                     

2. இந்தோனேசியாவில் கைது

மயூரன் அவரது 24வது பிறந்தநாளான 2005 ஏப்ரல் 17 அன்று பாலியில் வைத்து மேலும் 8 அவுஸ்திரேலியர்களுடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டார். மொத்தம் ஒன்பது பேரில் முதல் நான்கு பேர் மைக்கல் சூகாஜ், ரினாய் லோரென்ஸ் பெண், ஸ்கொட் ரஷ், மார்ட்டின் ஸ்டீபன்ஸ் ஆகியோர் பாலியின் அனைத்துலக விமானநிலையத்தில் அவுஸ்திரேலியாவுக்கு செல்லக் காத்திருக்கும் போது தமது உடம்புடன் சேர்த்து மொத்தம் 8.3 கிகி போதைப் பொருளைக் கட்டி எடுத்துக் கொண்டு போக இருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுக் கைது செய்யப்பட்டனர்.

மயூரனும் மேலும் மூன்று பேர் பாலியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 350 கிராம் போதைப் பொருட்களுடன் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் மயூரன் தனக்கு இவ்விடயத்தில் ஒரு தொடர்புமிருக்கவில்லை எனத் தெரிவித்தார்.

அதே நாள் மாலை இவர்களின் தலைவர் எனக் கருதப்படும் ஆண்ட்ரூ சான் என்பவர் கைது செய்யப்பட்டார்.

                                     

3. ஆத்திரேலியக் காவல்துறையின் செயற்பாடு

மயூரனுடன் குற்றம் இழைத்த ஸ்கொட் ரஷ் என்பவரின் தந்தை லீ ரஷ், தனது மகனின் நடத்தையில் சந்தேகப்பட்டு, சம்பவம் நடப்பதற்கு முன்னர் ஆத்திரேலிய நடுவண் அரசின் காவல்துறையினருக்கு தனது மகன் பாலிக்கு செல்லவிருப்பதாகவும், போதைப்பொருள் கடத்தல் வகையான குற்றத்தை அவர் இழைக்கலாம் எனவும் தகவல் கொடுத்தார். தாம் அவரை அக்குற்றம் இழைக்காமல் தடுத்து நிறுத்துவதாக காவல்துறையினர் லீ ரஷ்சிடம் உறுதி அளித்தனர்.

ஆனாலும், காவல்துறையினர் பின்னர் அவருடன் தொடர்பு கொள்ளவில்லை என ஸ்கொட் ரஷ்சின் வழக்கறிஞர் தெரிவித்தார். ஆத்திரேலியக் காவல்துறையினர் இந்தோனேசியக் காவல்துறையினருக்கு கைதுகள் நடைபெறுவதற்கு இரு வாரங்களுக்கு முன்னர் இது குறித்து எச்சரித்தனர். ஒன்பது பேரும் கைது செய்யப்பட்டவுடன் ஆத்திரேலியக் காவல்துறையினரே இந்தோனேசியாவுக்குத் தகவல் தெரிவித்தனர் என்ற செய்தி வெளியிடப்பட்டது. ஆத்திரேலியாவின் இந்த செயல்பாடுகள் குறித்து நாடெங்கும் பலத்த கண்டனங்கள் கிளம்பின.

லீ ரஷ் ஆத்திரேலிய நடுவண் காவல்துறையினருக்கு எதிராக நடுவண் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இவ்வாறான தகவல்கள் சட்டமா அதிபர் மூலமாகவே வெளிநாடு ஒன்றுக்குக் கொடுக்கப்பட வேன்டும் என ரஷ் இன் வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனாலும், சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னரே இது பொருந்தும் என ஆத்திரேலிய அரசு வாதாடியது. 2006 சனவரியில் வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.                                     

4. மரண தண்டனை

வழக்கு விசாரணையின் பின்னர் 2006 சனவரி 24 இல் மயூரனுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. மயூரனே மற்றவர்களின் உடலில் போதைப் பொருளைக் கட்ட உதவியவர் என்று குற்றஞ் சாட்டப்பட்டது. இவரது மேன்முறையீடு வெற்றியளிக்கவில்லை. இவர்களின் மற்றுமொரு தலைவாரான அண்ட்ரூ சான் என்பவருக்கும் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஏனையோருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

அன்றைய ஆத்திரேலியப் பிரதமர் ஜோன் ஹவார்ட் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும் போது, "அவுஸ்திரேலிய அரசு மரண தண்டனையை எதிர்க்கிறது என்றும் வேறொரு நாடொன்றின் அவுஸ்திரேலியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் போது தண்டனையை நிறுத்தும்படி அந்நாட்டு அரசை நாம் முறைப்படி கேட்போம்" என்றார்.

                                     

5. மயூரனின் சிறை வாழ்க்கை

மயூரன் சிறையில் இருந்த காலத்தில் சக கைதிகளுக்கு ஆங்கிலம், கணினி, வரைபட வடிவமைப்பு மற்றும் பல துறைகளில் சொல்லித் தந்தார். சிறைச்சாலையில் கணினி அறை மற்றும் சித்திர அறை ஆகியவற்றைத் திறக்க சுகுமாரன் முன்னின்று உழைத்தார். சுகுமாரன் கேர்ட்டின் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழி மூலம் நுண்கலை படித்துப் பட்டம் பெற்றார். ஓவியம் வரைதலில் கெட்டிக்காரரான மயூரன், அவரும் அவரது சக தோழர்களும் தயாரிக்கும் ஓவியங்களை விற்பனை செய்வதன் மூலம் வணிகத் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.

சிறைச்­சா­லையில் 20 கைதி­களை வழி­ந­டத்தும் தலை­மைப்­ பொ­றுப்பு மயூரனுக்குக் கிடைத்­தது. தனக்குக் கீழிருந்த கைதிகளுக்கு தகுந்த பொறுப்புக்களைக் கொடுப்பது, பாதுகாப்புப் பணியாளர்களுடன் தொடர்புகளைப் பேணல், சர்ச்சைகளைத் தீர்த்து வைப்பது, அத்துடன், துப்பரவு, தோட்டப் பணி, சிறைச்சாலையில் சிறிய திருத்த வேலைகளைச் செய்வது போன்ற பணிகளில் மயூரன் ஈடுபட்டார்.

இறுதிக் காலத்தில் நுசகம்பான்கன் தீவு சிறையில் இருந்த போது மயூரன் தன்னோவியங்கள் பலவற்றை வரைந்தார். இறக்கும் வரை முடிந்த அளவு ஓவியங்களை வரைய வேண்டுமென்பதே அவரது கடைசி விருப்பமாக இருந்தது. இவரது கடைசி ஓவியம் இந்தோனேசியக் கொடியில் சிவப்பு-வெள்ளை நிறத்தில் குருதி வடிவதாக வரையப்பட்டிருந்தது.

                                     

6. ஆத்திரேலியாவில் தாக்கங்கள்

சுகுமாரனுக்கும் சானுக்கும் ஆதரவாக 2015 சனவரி 29 அன்று மாலை சிட்னியின் மையப் பகுதியில் உள்ள மார்ட்டின் பிளேசில் மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்வு "கருணை இயக்கம்" என்ற அமைப்பினரால் நடத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆத்திரேலியாவின் பிரபலமான இசைக் கலைஞர்கள் பலரும் கலந்து கொண்டனர். இதே போன்ற அஞ்சலி நிகழ்வுகள் பன்னாட்டு மன்னிப்பு அவையினால் மெல்பேர்ண், அடிலெயிட், கான்பரா, பைரன் பே போன்ற பல நகரங்களில் நடத்தப்பட்டன.

2015 சனவரியில் ராய் மோர்கன் ஆய்வு அமைப்பினால் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு ஒன்றில் 52% பேர் மரணதண்டனைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

2015 பெப்ரவரி 13 இல், ஆத்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷொப், மரணதண்டனை நிறைவேற்றப்படும் பட்சத்தில், பாலி சுற்றுலா ஒன்றியொதுக்கலுக்கு ஆதரவாகக் கருத்துத் தெரிவித்தார். ஆத்திரேலிய நாடாளுமன்றத்தில் ஜூலி பிஷொப், மற்றும் தொழிற் கட்சி வெளியுறவுத்துறைப் பேச்சாளர் தானியா பிலிபெர்செக் ஆகியோர் மயூரனுக்கும் சானுக்கும் கருணை காட்டுமாறு இந்தோனேசியத் தலைவரைக் கேட்டுக் கொண்டனர். விக்டோரியா மாநில உச்சநீதிமன்ற நீதிபதி லெக்சு லாசுரி பாலிக்கு சென்று மயூரனையும், ஆன்ட்ரூ சானையும் சந்தித்தார்.

ஏப்ரல் 29 அன்று மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முதல் நாள் 2015 ஏப்ரல் 28 அன்று மனித உரிமை வழக்கறிஞர் ஜெப்ரி ராபர்ட்சன் சிட்னியில் நடந்த ஒரு நினைவு நிகழ்வில் உரையாற்றினார்.

மரண தண்டனை நிறைவேற்றத்தை எதிர்நோக்கியிருக்கும் மயூரன் சுகுமாரனை மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு வழங்குமாறு ஆஸ்திரேலிய பிரதமர், டொனி அபொட் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடொடொவுக்கு மீண்டும் கோரிக்கை விடுத்தார். மயூரன், மற்றும் சானுடன் சேர்த்து மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ள 10 பேரினதும் மரணதண்டனையை நிறுத்துமாறு ஐநா பொதுச் செயலாளர் பான் கி மூன் இந்தோனேசியத் தலைவர் ஜோகோ விடோடோவிடம் 2015 ஏப்ரல் 25 அன்று கோரிக்கை விடுத்தார்.                                     

7. மரணதண்டனை நிறைவேற்றம்

இந்தோனேசிய அரசின் ஆணைப்படி, மயூரன் சுகுமாரன், ஆன்ட்ரூ சான் மற்றும் வேறு ஆறு பேருக்கும் 2015 ஏப்ரல் 29 அன்று இந்தோனேசிய நேரம் அதிகாலை 12:25 மணிக்கு நுசகம்பாகன் தீவில் 12 -பாதுகாப்புப் படையினரால் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

மயூரன் சுகுமாரனும், அன்ட்ரூ சானும் கொலைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னர் சார்லி பரோஸ் என்ற பாதிரியார் இருவரையும் சந்தித்தார். இருவரும் புனர்வாழ்வு பெற்ற விதத்தை தாம் அவர்களுடன் நினைவு கூர்ந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். துப்பாக்கியால் சுடப்படும் போது அவர்கள் அசையாமல் இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு எட்டுப் பேரும் தடிகளால் பிணைக்கப்பட்டார்கள் என பாதிரியார் சார்லி பரோஸ் கூறினார். துப்பாக்கியால் சுடப்படும் போது மயூரனும் ஏனைய எழுவரும் தமது கண்களை மூடிக் கட்டுவதற்கு அனுமதிக்கவில்லை. மாறாக வியக்கத்தக்க அருள் என்ற கிறித்தவப் பாடலை அவர்கள் இணைந்து பாடிக் கொண்டிருந்தனர்.

                                     

8. நினைவுகள்

மயூரன், சான் ஆகியோரின் நினைவாக அவர்களின் பெயரில் ஆண்டு தோறும் இரண்டு புலமைப் பரிசில்கள் இரண்டு இந்தோனேசிய மாணவர்களுக்கு வழங்கப்படும் என ஆஸ்திரேலிய கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் 2015 ஏப்ரல் 30 அன்று அறிவித்தது.

                                     

9. வெளி இணைப்புகள்

 • mercycampaign.org
 • கொடிய மரணத்தை எதிர்கொள்ளும் மயூரனும், சானும்
 • Raji and Brintha Sukumaran, ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
 • மயூரனுக்காக நீதிபதி கண்ணீர், தி ஒஸ்ட்ரேலியன், பெப்ரவரி 16, 2006
 • பாலி தண்டனைகளுக்கு பிரதமர் எதிர்ப்பு, February 13, 2006
 • Bali Nine kingpin suffers amnesia in court
 • பாலி ஒன்பதின்மரின் விசாரணையில் நீதி இருக்காது, வழக்கறிஞர்கள் தெரிவிப்பு
 • பாலி 9 மேன்முறையீட்டுக்கு ஏற்பாடு
 • பாலி இரட்டையர்களுக்கு மரண தண்டனை, சிட்னி மோர்னிங் ஹெரால்ட், 14 February 2006
 • Canberra faces moral maze of Bali verdicts, The New Zealand Herald, பெப்ரவரி 16, 2006
 • பாலி ஒன்பதின் சுகுமாரன் மரணதண்டனை பெற்றார்
 • மரண தண்டனை வாசலில் ஆஸ்திரேலியத் தமிழன்